மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதன் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் செய்தி வெளியானது. மதுரையில் கரோனா தொற்றுநோய் பரவல் குறித்து வந்த ஊடக செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அந்த வழக்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணனும் ஒரு மனுதாரராக இணைந்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 4) மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்குரைஞர், "மதுரையில் கரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் தினம்தோறும் 1,400 பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய அளவில் கரோனா கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கரோனா பரிசோதனை செய்து முடிவு வருவதற்கு ஏழு நாள்கள் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏன் இந்த கால தாமதம்? மேலும் அரசு மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதி உள்ளது. அதில் எத்தனை நோயாளிகள் உள்ளனர். எத்தனை படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது என்பது போன்ற தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா? நோயாளிகள் பயன்படுத்தும் முகக் கவசங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பி.பி.இ போன்ற பாதுகாப்பு உபகரண கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? " என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பு வழக்குரைஞர், கால அவகாசம் அளிக்க கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே உரிய விதிமுறைகள் இருக்கின்றபோது நீதிமன்றம் உத்தரவுகளை புதிதாக பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.