தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "எங்கள் கிராம பஞ்சாயத்தில் 8 ஆயிரம் பேர் உள்ளனர். இரண்டாயிரம் கால்நடைகள் உள்ளன. போதிய மழை இல்லாததால் மூன்றாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக உள்ளன. காட்டாற்று வெள்ளப்பெருக்கில் இருந்து எங்களை காக்கும் விதமாக திப்பம் என்ற மணல்மேடு உள்ளது. தற்போது மணல் மேட்டிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வரை பொக்லைன் மூலம் மணல் அள்ளுகின்றனர்.
இந்த பகுதியில் மணல் அள்ளினால் எங்களின் ஒரே நீராதாரம் பாதிக்கும். கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும். குடிநீர் பாதிப்பு மட்டுமின்றி காட்டாற்று வெள்ளத்தின்போது ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இப்பகுதியில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மணல் மேட்டை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தடை உத்தரவை மீறி பல இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து அதிகளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. மணல் திருட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க தவறிய அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து, அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.