மதுரை: மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 35 கி.மீ., தொலைவில் தங்களாச்சேரி எனும் சிறிய கிராமம் உள்ளது. மானாவாரி பயிர்களையே வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் நிறைந்த மண் அது.
பழமையும், புதுமையும் ஒரு சேரக் காணக் கிடைக்கும் அழகிய சிற்றூர். இவ்வூரைச் சேர்ந்த அன்னவயல் காளிமுத்து, முன்மாதிரியான விவசாயியாக வாழ்ந்து வருகிறார்.
கல்யாணம் கட்டிப்பார்... வீட்டைக் கட்டிப்பார்...
விவசாயம், மரம் நடுதல், சுற்றுச்சூழல், பாரம்பரியம் போன்ற பல்வேறு விஷயங்களில் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவர் பயிற்றுவிக்கிறார். மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மகத்தான மனிதரான இவர், தங்களாச்சேரி கிராமத்தில் கட்டியிருக்கும் வீடு, அப்பகுதியில் மட்டுமன்றி, வீடு கட்ட நினைக்கின்ற பெரும்பாலான நபர்களிடம் பேசுபொருளாகி இருக்கிறது.
அதாவது அவர் அந்த வீட்டை வெறும் ஏழு லட்ச ரூபாய் செலவில், 35 வேலை நாட்களில், சுமார் 700 சதுர அடியில் மாடியுடன் கட்டி அசத்தியுள்ளார்.
'கல்யாணம் கட்டிப்பார்... வீட்டைக் கட்டிப்பார்...' என்று பயமுறுத்துகின்ற நபர்களையெல்லாம் மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவிற்கு, வீட்டை உறுதியாக பாரம்பரியமான முறையில் அமைத்துள்ளார்.
மரபுக் கட்டுமான முறையில் வீடு
இது குறித்து விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், 'மரபுக் கட்டுமான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வீட்டை நாங்கள் 'கூடு' என்றுதான் அழைக்கிறோம்.
தன்னுடைய முயற்சியில் தனக்காக தூக்கணாங்குருவி உள்ளிட்ட பறவைகள், கட்டிக் கொள்வதைக் கூடு என்கிறோம். அதுபோன்றுதான் எங்கள் முயற்சியில் நாங்களாக கட்டிக் கொண்ட இந்த வீட்டைக் கூடு என்கிறோம்.
மனிதர்கள் வாழ்வதைப் போலவே எங்கள் கூட்டில் உயிரினங்கள் வாழ்வதற்கும் உரிமையுண்டு என்ற அடிப்படையில் வீட்டிற்கு முன்பாகத் திண்ணையும், அந்தத் திண்ணையின் கீழே அறைகளும் அமைத்துள்ளோம்.
அதேபோன்று வீட்டைச்சுற்றி மேல் பகுதியில் பறவைகள் தங்கிச்செல்ல வசதியாக சுரக்குடுக்கைகளையும் வைத்துள்ளோம்.
வீடு கட்டுவதென்பது மிக சவாலான விஷயமாகிவிட்ட நிலையில், எங்களால் கட்டப்பட்ட இந்த வீடு அந்த சிந்தனையைத் தகர்த்துள்ளது. சிமென்ட், கம்பி, மணல் இல்லாமல் வீடு கட்ட முடியுமா என்ற கேள்விக்கு விடையாக எங்கள் வீடு அமைந்துள்ளது.
பறவைகளுக்குக் கூடு; அதுபோல் எங்கள் வீடு
பறவை தனக்கான கூட்டை, அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு உருவாக்குகிறதோ, அதனை அடிப்படையாகக் கொண்டு, எங்கள் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே இந்த வீட்டைக் கட்டி முடித்துள்ளோம்.
ஏழடி பள்ளம் தோண்டி, ஒன்பது கல் தூண்களைப் பொருத்தி, கட்டப்பட்ட இந்த வீட்டில் சுவற்றில் எங்கும் கம்பிகள் கிடையாது. அதே போன்று பூச்சு மானத்தைத் தவிர்த்து சிமென்ட்டும் பயன்படுத்தப்படவில்லை. பெயின்ட் அடிக்கவில்லை என்பதுடன் லேமினேஷனும் செய்யவில்லை. அதேபோன்று தரைத்தளத்தில் டைல்ஸ் பதிக்கவில்லை.
மேற்கண்ட நவீன கட்டுமானங்களெல்லாம் வீட்டை சூடாக்குவதுடன், உள்ளே குடியிருக்கும் நம்மையும் சூடாக்கிவிடுகின்றன.
மேல் தளத்தில் மஞ்சனத்திக் குச்சிகளைக் கொண்டே அமைத்துள்ளோம். மரபுக்கட்டுமானத்தில் (Legacy construction) செலவு மிகக் குறைவாக இருப்பதுடன், நீடித்த உழைப்பும் கொண்டதாக இருக்கிறது.
தங்களாச்சேரியிலுள்ள பழமையான பல்வேறு வீடுகள் இதுபோன்றே மரபுக் கட்டுமானத்தை (Legacy construction) கொண்டதாகும். இன்றைக்கும் நான்கு தலைமுறைகளாக அந்த வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்' என்றார்.
வெயிலைத் தாங்கும் வீடு
அந்தக் கிராமத்திலுள்ள பழமையான வீடுகள் மஞ்சனத்திக் குச்சி, விட்டம், பனை விட்டம், நெல் வைக்கோல், பருத்திமார், கற்றாழை ஆகியவற்றைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வீடுகளில் கரையான் அரிப்பதில்லை என்பதுடன் அதிக தாங்குதிறன் கொண்டவையாக உள்ளன.
கடுமையான உச்சி வெயிலிலும்கூட இந்த வீட்டின் உள்புறம் மிக குளிர்ச்சியாகவே உள்ளது.
அதுமட்டுமன்றி, இந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு மணி வெயிலிலும்கூட படுத்துறங்க முடியும்.
அந்த அளவிற்கு மரபுக்கட்டுமானப் பொருட்கள் (Legacy Construction Materials) கடும் வெயிலைக்கூட தாங்கும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகளின் ஆயுளைப் போன்றே மனிதர்களின் ஆயுளும் கூடும்
இதுகுறித்து இவ்வீட்டை வடிவமைத்த பொறியாளரும், சரவணன் மீனாட்சி நெடுந்தொடர் நடிகருமான சங்கரபாண்டி கூறுகையில், 'உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது. மனிதனின் உடலைப் போன்று வீடானது அமைய வேண்டும்.
கோடை மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்றவாறு நமது உடல் எவ்வாறு சமநிலை அடைகிறதோ அதுபோன்று நாம் வசிக்கும் வீடும் இருப்பதுதான் இயற்கை நியதி. நவீனமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வீடுகள் அவ்வாறு இருப்பதில்லை.
மேலும் அவையனைத்தும் ரசாயனத்தின் கலவையாகவே உள்ளன. இதனைத் தவிர்த்து மரபுக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வீடுகளை உருவாக்குதன் மூலம் வீடுகளின் ஆயுளைப் போன்றே மனிதர்களின் ஆயுளும் கூடும்.
தொழில்நுட்பத்தையும் புறக்கணிக்காமல், மரபுக் கட்டுமானத்தையும் தவிர்க்காமல் வீடு
இன்று வீடு கட்டுவதற்கு அடிப்படை மூலப் பொருளாக மணல் ஆகிவிட்டது. ஆனால் தஞ்சை மற்றும் மீனாட்சியம்மன் கோயில் மணலால் கட்டப்படவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மரபுக் கட்டுமானத்தில் மணலின் பயன்பாட்டை பெருமளவு குறைத்துக் கொண்டு வீடு கட்ட முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.
இவையனைத்தும் இங்கு ஏற்கெனவே நம் முன்னோர்களால் நிரூபிக்கப்பட்ட முறைதான். அதைத்தான் இப்போது மீள் உருவாக்கம் செய்கிறோம்.
தற்போதுள்ள தொழில் நுட்பத்தையும் புறக்கணிக்காமல், அதே நேரம் மரபுக் கட்டுமானத்தையும் தவிர்க்காமல் வீடு கட்ட முடியும் என்பதுதான் உண்மை' என்கிறார்.
கடன் வாங்கி வீடு கட்டி, வாழ்க்கை முழுவதும் அல்லல்படுவதைவிட, மரபுக் கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் குறைந்த செலவில் வீடு கட்டி ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை நிரூபித்துள்ள விவசாயி அன்னவயல் காளிமுத்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.