தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவு இல்லாதிருப்பினும் மாநில சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து தோப்பூரில் அமைந்துள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையிலும் கரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் இதற்காகத் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு 20 நோயாளிகள் தங்குவதற்காகத் தனி அறைகள் கழிப்பறை வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் இன்னும் சில நாள்களில் முடிவடைந்து கட்டடம் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்பின்னர் கரோனா வைரஸ் தடுப்பதற்காக தனி மருத்துவக் குழு அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எளிதில் பரவக்கூடியதாக இருக்கும் நோய் தொற்றலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, இனிவரும் காலங்களில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - சிறைகளுக்குக் கட்டுப்பாடு