முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாள்கள் நடைபெற்றுவரும், இவ்விழாவில் நேற்று (மார்ச் 30) சுப்பிரமணிய சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இன்று (மார்ச் 31) பகல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நரகாசுரனை வதம்செய்தால் தனது மகளை திருமணம் செய்துவைக்கிறேன் என இந்திரன் முருகனிடம் கூறினார். அதன்படி நரகாசுரனை வதம்செய்த முருகனுக்கு அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்றதாக நம்பிக்கை.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. குறிப்பாக சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலிருந்து சொக்கநாதர், மீனாட்சிக்கு பிரியாவிடையுடன் திருமண விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிகளுக்கு பட்டாடை சூட்டி, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் 'அரோகரா அரோகரா' எனக் கோஷங்களை எழுப்பினர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஏப்ரல் 1) காலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு: தற்போதைய நிலை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!