மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, அதற்கானப் பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் முடிவடையும் எனத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை.
எனவே, மத்திய முதன்மைச்செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (நவ.22) பட்டியலிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும். (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026)
* அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதி மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவினத்துறை பரிசீலனையில் உள்ளது.
* மதுரையிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எம்பிபிஎஸ் படிப்பு, ராமநாதபுரம் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக துணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், எவ்வாறு அக்டோபர் 2026-ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த நிலை அறிக்கையை மத்திய முதன்மைச்செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன - ஜே.பி.நட்டா தகவல்