சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சொத்து தகராறில் 2010ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்குச் சிவகங்கை நீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல், மெத்தனமாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் விசாரணை அலுவலர் செயல்பட்டுள்ளார். இதனால் மனுதாரர் விடுதலை செய்யப்படுகிறார்.
எந்த விசாரணையாக இருந்தாலும் ஒருதலை சார்புடன் நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும். நியாயமான விசாரணை அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவதே விசாரணையின் நோக்கமாகும். தமிழ்நாடு காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது.
இந்த பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது. இதே போல் விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
விசாரணை அலுவலர்கள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளார்களா? விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும், தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பதற்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.