மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் சரியானது என நேற்று (மே 18) உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை தமுக்கம் மைதானம் முன்பு வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த சு.வெங்கடேசன், அங்கு இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. சு.வெங்கடேசன், “ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக நிறைவேற்றிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அது தமிழர்களின் பண்பாட்டு மரபை வெளிப்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொண்டு, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மரபை மீட்கின்ற போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்த வெற்றிக்கு பலர் பாடுபட்டுள்ளனர்.
இதே தமுக்கம் மைதானம் முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், போராட்ட வீரர்களால் நிறைந்து காணப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டிருந்தனர் என்பது தமிழர்களின் நெஞ்சில் அகலாத காட்சியாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இந்த நாளில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக, நான் உள்பட பலர் இந்த வழக்கிற்காக வாதிட்டோம். இந்த வழக்கின் இறுதி கட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இறுதி விசாரணையில், மிக முக்கியமான வழக்கறிஞர்கள் வாதிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் எங்களது கோரிக்கையினை முன் வைத்தோம்.
அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, உடனடியாக உத்தரவிட்ட முதலமைச்சருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீதான வழக்கு குறித்து ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைத்துள்ளது. அது சார்ந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது - கார்த்திகேய சிவசேனாபதி!