மதுரை: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவி உள்பட 60 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை ஒன்றிய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நிரப்ப வேண்டும் என்று நேற்று (ஜூலை 29) கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து ட்விட்டர் மூலமாக சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்டுள்ள பதிவில், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் காலியிடங்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டுமென்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்த கேள்விக்கு ஒன்றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலளித்துள்ளார்.
சிறுபான்மையினர் முன்னேற்றம் காண ஆய்வு
அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "1992 இல் உருவாக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அரசியல் சாசனம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டபேரவைகள் நிறைவேற்றும் சட்டங்களின் அமலாக்கத்தை கண்காணித்து வருகிறது.
இவற்றின் சிறப்பான அமலாக்கத்திற்கான பரிந்துரைகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தந்தும் வருகிறது. புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து பாரபட்சங்களை களைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சிறுபான்மையினர் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண ஆய்வுகளை நடத்துகிறது. அரசுகளுக்கு ஆலோசனைகள் தருகிறது. காலமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது.
49 காலி பணியிடம்
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் மொத்த ஊழியர் பலம் 80 பேர். தற்போது 49 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் பதவிகள் அடக்கம்.
கோவிட் காலத்தில் எழுந்த காலியிடங்கள் இவை. காலியிடங்களை நிரப்புவது என்பது பணி நியமன விதிகள் அடிப்படையில் செய்யப்படுகின்றன.
இக்காலியிடங்கள் 31.07.2021 க்குள்ளாக நிரப்ப வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்ற ஆணை (ரீட் மனு -சி- 1985 /2021) பணித்திருக்கிறது. அந்த உத்தரவு அரசின் பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி கருத்து
80 ஊழியர் இடங்களில் 49 இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. அதிலும் தலைவர் பதவியே காலியாக இருக்கிறது. ஐந்து உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன.
இந்த நிலையில் எப்படி ஆணையம் செயல்பட முடியும்? சிறுபான்மையினர் நலன்களை எப்படி உறுதி செய்ய முடியும்? ஆகவே டெல்லி உயர்நீதிமன்ற ஆணை உடனடியாக அமலாக்கப்பட வேண்டும்." என்று எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பெகாசஸ் விவகாரம்'