மதுரை: தூத்துக்குடி முத்துநகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் பனிமய மாதா, வேளாங்கண்ணி மாதாவுக்கு அடுத்தபடியாக உலகப் புகழ் பெற்ற திருத்தலமாகும். கடந்த 1542ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் முயற்சியால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. கடந்த 1582ஆம் ஆண்டு ஜேசு சபை பாதிரியார்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர்.
தற்போது உள்ள இந்த ஆலயம் கடந்த 1713ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 1982ஆம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தங்கத் தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 430 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பனிமய மாதா ஆலயத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த நிலையில் இந்தத் திருத்தலத்தின் உலகப் புகழ் வாய்ந்த தங்கத் தேர்த் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பர். மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பனிமயமாதாவின் பக்தர்கள் என்பதால், திருவிழா சமயத்தில் தூத்துக்குடி நகரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
இந்த விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க முடிவெடுத்து உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது (வண்டி எண் = 06005) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி, மேலூர் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் தூத்துக்குடிக்குச் சென்றடையும்.
மறுமார்க்கம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது (வண்டி எண் = 06006) சனிக்கிழமை நள்ளிரவு 2.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மேலும் இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகரின் ஆன்மிக மற்றும் சுற்றுலா அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத் திருவிழாவுக்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ள சிறப்பு ரயில் சேவைக்கு பக்தர்களும் பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் மீன் சிலை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!