மதுரை: மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90 கி.மீ. ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய பணிகளில் இதுவரை 73 சதவீதம் மின்கம்பத்திற்கு அடித்தளம் இடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 37 சதவீதம் மின் கம்பம் நடும் பணிகள் முடிந்துள்ளன. ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வயர்கள் இணைக்கும் பணிகள் முடிந்துள்ளது.
மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர் ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் உள்ள மாற்று ரயில் பாதைகள் மற்றும் தேனியில் உள்ள சரக்கு நிலைய ரயில்பாதை ஆகியவற்றிலும் மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழியில் உள்ள 7 பெரிய பாலங்கள், 225 சிறிய பாலங்களிலும் மாற்று வழியில் மின்கம்பம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்சார ரயில்களை இயக்க ஆண்டிபட்டி அருகே வள்ளல் நதி கிராமத்தில் மின் வழங்கல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
தடையற்ற மின் வழங்கலை உறுதி செய்ய வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் சிறிய மின்சாரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகிறது. இவற்றை மதுரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்குவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேனி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பராமரிப்பு நிலையமும், மின் பராமரிப்பு ரயில் பெட்டி நிலையமும் அமைய இருக்கிறது.
எனவே, மதுரை - போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, செங்கோட்டை அருகே 34 கிமீ பகவதிபுரம் - எடமன் மலை ரயில் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து படைத்தள விரிவாக்கத்திற்காக ரயில் பாதை மாற்றி அமைக்கப்பட வேண்டி இருப்பதால் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே கட்டுமான அமைப்பிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு மூளையாக இருந்த பெண்! கொள்ளையனை நெருங்கிய போலீஸ்..முழுப்பின்னணி என்ன?