மதுரை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் பேசுகையில், “கருணாநிதி கூட ஜெயலலிதாவை அம்மையார் என மரியாதையாக அழைப்பார். இந்தியாவில் உள்ள தலைவர்கள் ஜெயலலிதாவின் திறமையை கண்டு பாராட்டினார்கள்.
ஜெயலலிதாவைப் போலவே எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்திச் செல்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் பணியாற்றுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னே அதிமுக சுக்கு நூறாக உடைந்து விடும் என நினைத்தார்கள். பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக வெற்றி நடைபோடுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின்பு, மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கரோனா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிக அளவில் பரவிக்கொண்டே இருக்கிறது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சென்னை மக்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
சென்னை மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது, அதிமுக சிறப்பாக செயல்பட்டு மக்களை காத்தது. சென்னையில் தற்போதைய மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து திமுக தலைமையிலான அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என திமுக அரசு கூறியிருந்தது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்க உள்ளோம். லண்டனில் உள்ள பென்னி குயிக் நினைவிடம் மற்றும் சிலையை தமிழக அரசு அறிவித்தது போல பராமரிக்க வேண்டும்.
பென்னி குயிக் நினைவிடத்தை பராமரிக்க தமிழக அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. பென்னிகுயிக் நினைவிடம் மற்றும் சிலையைப் பராமரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருடிய நபருக்கு தர்ம அடி!