சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், விரிவான விசாரணைக்காக வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இச்சூழலில் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அம்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கிறேன். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்து, தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடயவியல் துறையும் சிபிஐயும் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் நான் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர் முருகன் ஆகியோரின் ஜாமின் மனு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கியக் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்பது காரணமாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் கொலை வழக்கின் சிபிஐ அறிக்கையில் மேலும் சில விஷயங்கள் இடம்பெறவேண்டும்'- ஹென்றி திபேன்