மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் (எ) சக்திவேல் (35). இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2021ல் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து பிணையில் வெளிவந்த சக்திவேல், தனது இருசக்கர வாகனத்தில் சோழவந்தான் அருகே சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி காவல்துறையினர் இறந்த சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சக்திவேல், நான்கிற்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப் பழிவாங்கும் வகையில் அவர் பிணையில் வெளியே வருவதை தெரிந்து கொண்டு கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை தேடி வருகிறது.
இதையும் படிங்க: கேரளா சிபிஐ(எம்) மாநில தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு - சிசிடிவி காட்சி...