நந்தினி ரியல் எஸ்டேட் பிரபு, மீனாட்சி பேன் ஹவுஸ் சரவணன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான நெல்லை பாலு உள்ளிட்டோர் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் முன்னிலையில் மதுரையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 27 சானிடரி இயந்திரங்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
அப்போது, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், "கரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்களில் சிலர் விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். கரோனா வைரஸை தடுக்க ஒவ்வொருவரும் ராணுவ வீரர் போல செயல்பட்டு வருகின்றனர். போர் களத்தில் எதிரிகள் எப்போது வருவார்கள் என தெரியாது. அதுபோல தான் கரோனா தடுப்பு நடவடிக்கையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரையில் உள்ள 35 லட்சம் மக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை இணைந்து ராணுவம் போல் செயல்பட்டு வருவகின்றன.
எல்லைப் பகுதியில் உயிர் நீத்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், எதிரிகள் வருகிறார்கள் என தெரிந்தவுடன் உயிரை துச்சமென மதித்து அந்த இடத்தில் உயிர்விட்டு நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் மக்களை காப்பதில் அரசும், அரசு பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள்" என கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கவிதை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர்!