முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்," ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். ஏழு ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், நான் இன்னுமும் விடுதலை செய்யப்படவில்லை. 29 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில் மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 1600 ஆயுள் தண்டனை கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களது விடுதலை தொடர்பான சட்ட மசோதா காத்திருப்பில் உள்ளது. ஆகவே சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," 7பேரின் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளது. இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில்," அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், அரசு முடிவெடுத்தது. ஆகவே இந்த விவகாரத்திலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.