தென்னக ரயில்வே ரயில் நிலையங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி, காப்பகங்களில் சேர்த்தல், மறுவாழ்வு அளிப்பதில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன், "ரயில்வே காவல் துறை இயக்குனர் டாக்டர் சைலேந்திர பாபு, கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், வயது முதிர்ந்த பெரியவர்களை மீட்டு அவர்களை குளிப்பாட்டி, புதிய உடைகள் அளித்து தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்துவருகிறோம்.
அவர்களை முதியோர் காப்பகங்கள், நகர்ப்புற வீடற்றோருக்கான காப்பகங்களில் சேர்த்துவிடுவதையும் முக்கிய பணியாக செய்துவருகிறோம். இதனால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தற்போது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பயணிகளின் நிம்மதியான பயணத்திற்கும் ரயில்வே காவல் துறை வழிவகை செய்துள்ளது.
குறிப்பாக, மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு பேர், கன்னியாகுமரியில் ஒருவர், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து ஏழு பேர் மீட்கப்பட்டு அந்தந்த ஊர்களில் உள்ள நகர்ப்புற வீடு, ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மேலும் அவர், இந்த நடவடிக்கையை ரயில்வே காவல் துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரயில்களிலோ, ரயில் நிலையங்களிலோ பிச்சை எடுப்பவர்கள் குறித்து 1512 என்ற toll-free எண்ணுக்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல் துறையினர் பயணிகளுக்கு வழங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் பெண் பயணியருக்கு பாதுகாப்பு - தமிழ்நாடு ரயில்வே காவல் துறை