மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் ரயில் பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டனர்.
மதுரை ரயில் நிலையத்தில் அனந்தபுரி விரைவு ரயிலிலிருந்து பெண் பயணி ஒருவர் இறங்கும்போது தவறி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை ரயில்வே காவல் துறையினரால் பயணிகள் மத்தியில் இந்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இப்பரப்புரையின்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஒலிபெருக்கியின் மூலமும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு காவல் இருப்புப்பாதை ஆய்வாளர் இயேசு ராஜசேகரன் கூறுகையில்,
- ரயிலில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டாம்,
- நகைகளை அணிந்துகொண்டு ஜன்னலோரம் அமர வேண்டாம்,
- ஒரு நடைமேடையிலிருந்து அடுத்த நடைமேடைக்கு செல்லவதற்கு நகரும் படிக்கட்டுகளை அல்லது நடைமேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்,
- கைப்பேசியில் பேசிக் கொண்டோ அல்லது காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டோ தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டாம்
என்பது குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார்.