மதுரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் எழுதிய 'தாத்தா தந்த கண்ணாடி' என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று (ஜன.3) நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், "முன்பொரு சமயம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எனக்கு எதிராகப் பேசிய ஒருவர், காந்தியைக் கொன்றது 'ஆர்எஸ்எஸ்' (RSS) என்று கூறினார். நான் அதனை மறுத்து, அவ்வாறு கூறாதீர்கள். எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, காந்தியை அவமானப்படுத்த வேண்டாம் என்றேன்.
தற்போது பாஜக நாடு முழுவதும் வளர்ந்துள்ளது, பல மாநிலங்களில் ஆட்சியிலும் உள்ளது. அப்படியானால் காந்தியை கொன்றவர்களைத் தான் இந்திய மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்களா? என்கிற பார்வை அரசியல் விமர்சகர்களிடத்திலும், குறிப்பாக வெளிநாட்டைச் சார்ந்தவர்களிடம் ஏற்படுத்தும்.
அப்படி காந்தியை கொன்றது சரி? என ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தால், அது யாருக்கு அவமானம் என பதில் அளித்தேன். மேலும், காந்தியை கொன்றவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள் அல்ல; மாறாக, காந்தியின் கருத்தை ஏற்று உண்மையாகவே அதற்காகப் பாடுபடுபவர்கள்.
மக்களும் அதனைக் கருதுகின்ற காரணத்தால்தான், பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்று கூறினேன். அதன்பிறகு தான், அந்த நபர் இனி எந்த ஒரு பேட்டியிலும், 'ஆர்எஸ்எஸ் காந்தியைக் கொன்ற இயக்கம்' என்று சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ராம.சீனிவாசன் இந்த புத்தகத்தின் மூலம் காந்தியின் கொள்கைகள் குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ஆனால், காந்தியின் கருத்தைப் பின்பற்றுவதாக கூறும் சிலர், மகாத்மா காந்தியின் கருத்துகளை, அவரவர்களின் சொந்த கருத்துகளுக்கேற்ப, மாற்றிக் கொள்கிறார்களோ?.. என்றே எனக்கு தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய அவர், "நான் ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களைப் பின்பற்றி நானும் ஆஎஸ்எஸ்-ல் இணைந்தேன். கடந்த 50 ஆண்டுகளாக, நான் முழு நேரமும் அந்த அமைப்பிற்காகவே உழைத்து வருகிறேன்" என்று பேசினார்.
இவ்விழாவில் நூலின் முதல் பிரதியை நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வெளியிட, வேலம்மாள் மருத்துவமனை நிறுவனர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். மேலும், அந்நிகழ்ச்சியில் வடமலையான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் புகழகிரி, பாத்திமா கல்வி நிறுவனத் தலைவர் ஷா, பேராசிரியர் ஆண்டியப்பன், மருத்துவர் ராமசுப்ரமணியன், மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது மோடி கோஷம்..! கைகளை அசைத்து சைகைக் காட்டிய பிரதமர்..!