மதுரை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதை எதிர்த்து, கோ.புதூர் பேருந்து நிலையத்தில், மதுரை மாநகர பாஜக சார்பில் நேற்று (ஜூலை 23) போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது, செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,"மின் கட்டண உயர்வால், தொழில் வளமிக்க தமிழ்நாடு தொழிற்சாலைகளை இழந்து, வேலை வாய்ப்புகளை இழந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வருவது அதிகமாகும். மின் கட்டணம் உயர்ந்தால் பொருள்களின் விலை உயரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மின் வாரிய கடனை அடைக்க வேறு வகையில் சிந்திக்க வேண்டும். இதை செய்யாமல் இருப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
மின் வாரியத்தில் ஆபத்து கால நிதி என ஒன்று உள்ளது. அதை பயன்படுத்த வேண்டும். ஆள தெரிந்தவர்களுக்கு அது தெரியும். ஆளத்தெரியவில்லை என்றால் அதை கண்டுபிடிக்க முடியாது" என கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தட்டும் - கே.எஸ்.அழகிரி