வெங்காயத்தின் விலை விண்ணைத்தொடும் நிலையில், வெளி சந்தையில் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்து நுகர்வோருக்கு சேவை செய்து வருகிறது மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தை. வெங்காயம், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தற்போது மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
நடுத்தர, அடித்தட்டு மக்கள், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை போதுமான அளவு வாங்குவதற்கு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையிலுள்ள பழங்காநத்தம் உழவர் சந்தை உற்பத்தியாளர்களான விவசாயிகளையும், நுகர்வோரான பொதுமக்களையும் பாதிக்காத வகையில் விலை நிர்ணயம் செய்துள்ளது பாராட்டைப் பெற்று வருகிறது.
இது குறித்து நேருநகரைச் சேர்ந்த அலமு சிங்காரம் கூறுகையில், 'பழங்காநத்தம் உழவர் சந்தையின் வாடிக்கையாளர் நான். இங்கு காய்கறிகள் ஃப்ரெஷ்சாகவும், தரமாகவும் இருப்பதோடு, வாங்குகின்ற விலையிலும் இருக்கிறது. எனது பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு பழங்காநத்தம் உழவர் சந்தையை நானே பரிந்துரை செய்கிறேன்' என்றார்.
கச்சிராயிருப்பைச் சேர்ந்த விவசாயி நாகலெட்சுமி கூறுகையில், 'எங்களது தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு வந்து இங்கே விற்பனை செய்கிறோம். உழவர் சந்தையின் நிர்வாக அலுவலகத்தில் நிர்ணயம் செய்யக்கூடிய விலையிலிருந்து ரூ.20 குறைவாகவே விற்பனை செய்கிறோம்.
உதாரணமாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ரூ.100-க்கு தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது' என்றார்.
மேலும் படிங்க: புதுச்சேரி டூ குமரி... சிறுவனின் 580 கிலோ மீட்டர் சைக்கிள் சாதனை பயணம்!