மதுரை: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள வேளாண் வரவு-செலவு அறிக்கை குறித்து இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை உலக அளவில் இதுவரை வெளியிட்டதாக வரலாறு இல்லை. தமிழ்நாட்டில் முதல் முறையாக அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது. இதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகத் திகழ்வது பாராட்டிற்குரியது.
ஒரு துறையை மேம்படுத்துவதற்கு அதன் போக்கு திசையைக் காட்டுவதற்கான ஒரு யுத்தியே இந்த வரவு-செலவு அறிக்கை. நிதி ஒதுக்கீடு, சலுகைகள், வாய்ப்புகள் என அனைத்தையும் இந்த நிதிநிலை அறிக்கையில்தான் நாம் பார்க்க முடியும்.
அந்த அடிப்படையில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வேளாண் துறை வளர்ச்சிக்கு தனிகவனம் கொடுத்து முக்கியத்துவம் அளித்திருப்பது சிறப்புக்குரியது.
வேளாண்மைக்கான கொள்கை முடிவுகள்
ஆனால், அதே நேரம் வேளாண்மைக்கான கொள்கை முடிவுகள் என்பது மிக மிக அவசியம். வேளாண்மையை எதை நோக்கி கொண்டு செல்லப் போகிறோம்?, என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்கப் போகிறோம்? என்ற அடிப்படையில் கொள்கைப் பார்வை வேண்டும். அதற்கு மாறாக இருக்கும்பட்சத்தில் இந்த முயற்சி வேறு சிக்கலுக்குள் ஆளாக்கி விடும் அபாயமும் உண்டு.
பசுமைப்புரட்சிக்குப் பிறகு நமது வேளாண்மை என்பது ஒரு சில நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. குறிப்பாக இடுபொருள்களான வேதி உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் என இவையனைத்தும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சென்று நமது விவசாயிகளை சிக்க வைத்துள்ளன. இதிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் தற்சார்புள்ளவர்களாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான ஒதுக்கீடுகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அது வெற்றிகரமான நிதிநிலை அறிக்கையாக இருக்க முடியும். புதிய அரசுக்கும் அது பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டு முதலமைச்சரும் கூட அதை நோக்கி சிந்திப்பதாகவே நான் கருதுகிறேன். அவரது பல்வேறு கூட்டங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும் என உத்தரவாதமாகப் பேசி வருகிறார். அந்த அடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என நான் கருதுகிறேன்.
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மையை நோக்கி நமது தமிழ்நாடு வேளாண்மையை திசை திருப்ப வேண்டும். வேதி உரம் சார்ந்த வேளாண்மை வேண்டாமா என்றால், அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். மூன்றிலிருந்து நான்கு விழுக்காடாக உள்ள இயற்கை வேளாண்மை 30, 40, 50 என படிப்படியாக உயர்த்த வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
இயற்கை வேளாண்மையின் மூலமாக அனைவருக்குமான உணவை உத்தரவாதப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உறுதியாக இதனைச் செய்ய முடியும். அதற்குப் பல்வேறு சான்றுகள் நம்மிடம் உள்ளன. தமிழ்நாட்டுலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற உழவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மூலமாக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
வேளாண்மைக் கல்லூரிகள்தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை முடிவாகக் கொண்டிருக்கிறோம். வேளாண் கல்லூரியில் உள்ள விஞ்ஞானிகளுக்கே நாம் விழிப்புணர்வு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
யூரியா போடாமல் செடி வளராது என்பது போன்ற பொருந்தாத முடிவுகளைக் கொண்டிருக்கிறார்கள். நமது காற்று மண்டலத்தில் 78 விழுக்காடு ஹைட்ரஜன் உள்ளது. அதனை யோசிக்காமல் யூரியா மீது பற்றுக் கொண்டவர்களாக படித்த விஞ்ஞானிகள் உள்ளனர் என்பது வேதனைதான்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபமே குறிக்கோள்
தற்போது இரண்டு வகையான போக்குகளை நாம் பார்க்கலாம். சிறு குறு உழவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த நிலங்களைத் தொகுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது. மற்றொன்று ஒப்பந்த சாகுபடி மூலமாக பெரு நிறுவனங்களுக்கு வழங்குவது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைப்பதற்கேற்றவாறு வேளாண்மையைத் திசை திருப்புவது. குறிப்பாக அவர்கள் விரும்பும் வகையில் மக்காச்சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு என ஒற்றைப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பது.
இதற்கு மாற்றாக விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுப்பண்ணைகளை உருவாக்கி, அவர்களுக்குள்ளாக பகிர்ந்து கொள்வது, அதனை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். பொதுவாக தமிழ்நாட்டு சந்தையை குறி வைத்து உற்பத்தி செய்வது என்ற போக்கும் நிலவுகிறது. இந்த முறை மிக மிக சிறிய அளவில் நடைபெறுகின்றது.
ஆனால் கார்ப்பரேட் மயமாக்கம் மிக வேகமாக நடைபெறுகிறது என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். பணம், அதிகாரம், வாய்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
ஒருங்கிணைந்த பண்ணை முறை
தமிழ்நாடு முழுவதும் மிக நுட்பமாக வேளாண்மை என்பது பண்ணை முறையாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். இதனை கொள்கை வகுப்பாளர்களும் கவனிக்க வேண்டும்.
வேளாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்துவிட்டு பிறகு சும்மா இருப்பது என்ற நிலை மாறி, தற்போது ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலமாக ஆண்டும் முழுவதும் ஒரு தொழிற்சாலை போன்று இயங்க வேண்டும் என்ற பார்வை உருவாகியுள்ளது. இதற்கான ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இங்கு கார்ப்பரேட் நிறுவனங்களைக் குற்றம் சுமத்துவதற்கு காரணம், அவர்களது நோக்கம் வெறுமனே லாபமீட்டுதல் மட்டுமே. சமூக நீதி, சுற்றுச்சூழல் நீதி போன்றவை குறித்து எந்தவித பார்வையும் அவர்களுக்கு இருப்பதில்லை.
குறிப்பிட்ட இடத்தில் சூழலைச் சிதைத்துவிட்டு, பிறகு வேறிடம் நோக்கி இடம் பெயர்வதுதான் கார்ப்பரேட்களின் செயல்பாடாக உள்ளன.
திணைக் கிராமங்கள்
இதற்கு மாற்றாக எங்களைப் போன்ற விவசாயப் பின்னணி கொண்ட நபர்கள் ஒருங்கிணைந்து ஏக்கர் கணக்கில் நிலங்களைப் பெற்று, நமது தொல்காப்பியம் வலியுறுத்தக்கூடிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணை வாழ்வியல் முறையை ஊக்குவித்து, தற்போதுள்ள நவீன முறையை கையிலெடுத்துக் கொண்டு மண்ணையும், வளத்தையும், சூழலையும் சிதைக்காமல் ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி வருகிறோம்.
இந்த முயற்சியின் மூலமாக முதலீட்டாளர்கள், உழைக்கும் மக்கள், வல்லுநர்கள் என்ற முக்கூட்டில் அனைவரையும் இணைத்து திணை வாழ்வியல் முறையை ஊக்குவித்து வருகிறோம். இதன் மூலம் பொருளாதாரம் பரவலாக்கப்படுவதோடு, ஆண்டு முழுவதுமான வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய முடிகிறது. கூட்டு முதலீடு, கூட்டு உற்பத்தி, கூட்டு பகிர்வு என்ற மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இயங்கி வருகிறோம்.
இதற்கு எடுத்துக்காட்டாக தென்காசி மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலத்தை இரண்டு அலகுகளாகப் பிரித்து வேளாண்மை செய்து வருகிறோம். முதலீடு செய்த 100 உறுப்பினர்களின் வீட்டுத் தேவைக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என அனைத்து அடிப்படைப் பொருள்களையும் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம். தற்போது முதற்கட்டமாக நெல் உற்பத்தி செய்து அரிசியை வழங்கியுள்ளோம்.
உழவர்களின் கூட்டு முயற்சி
இதுபோன்ற செயல்முறையின் மூலமாக சந்தை நமது கைகளில் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. குறைந்தபட்சம் ஒரு குடும்பம் மேற்கண்ட தேவைகளுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் செலவிடுகிறார்களென்றால், நூறு பேரின் செலவு பத்து லட்சமாகிறது. அதுவே ஓராண்டில் ஒரு கோடியாக மாறுகிறது. அதனை கிராமப்புறத்தில் முதலீடாக்குவதன் மூலமாக மிகப் பெரிய வேலைவாய்ப்பாக அங்கு மாற்றமடைகிறது.
இதன் மூலமாக பசுமைப் பொருளாதாரம் மலர்ச்சியடைய வாய்ப்பு உருவாகும். இதில் வெறும் ஐந்து விழுக்காடு லாபம் கிடைத்தாலே அது நீடித்த பொருளாதாராமாகவும், நம்பிக்கைக்குரிய பொருளாதாரமாகவும் மாறுகிறது.
வெறும் ரூ.8 கோடி முதலீட்டில் இந்த மாற்றத்தை கூட்டு முயற்சியாக மாற்ற முடியும்.
இந்தக் கூட்டுப் பண்ணை முறையை தமிழ்நாடு முழுவதும் செய்ய முடியும். ராமநாதபுரம் போன்ற வறட்சிமிகு பகுதிகளிலும் இந்த முறையை மேற்கொள்ள இயலும். அதற்கான திட்டங்களும் எங்களிடம் உண்டு. நமது தேவைக்குப் போக எஞ்சியுள்ளதை விற்பனைக்கு அனுப்பலாம். வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ கூட நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதுதான் கூட்டுப்பண்ணை முறையின் எதார்த்தம். இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதற்கு உதவி செய்யலாம்.
நமது தமிழ்நாடு அரசு வெளியிட உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், இது போன்ற கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்கலாம். மாவட்டத்திற்கு ஒரு திணை கிராமம் ஒன்றை மாதிரியாக உருவாக்கலாம். ஏற்கனவே முன் மாதிரியாக உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணை முறைகளை செயல்பட அரசு உதவி செய்யலாம்.
இந்த மாதிரிகளை உருவாக்கும்பட்சத்தில் தனியார் முதலீடுகள் பெருமளவு வருவதற்கு வாய்ப்பு உண்டு. அரசு முன்ருமானால், தனியாரும் துணிச்சலாக களமிறங்குவர். இதனால் வேலைவாய்ப்பும் உற்பத்தி பெருகும். அதன் தொடர்ச்சியாக சந்தை வாய்ப்புகளும் உருவாகும்” என்றார்.
இதையும் படிங்க: யானைகளின்றி காடுகள் இல்லை... காடுகளின்றி எந்த உயிர்களும் இல்லை!