மதுரை: பிரதமரின் மக்கள் நல சேவை திட்ட பரப்புரை அமைப்பின் தேசிய தலைவரும், பிரதமர் மோடியின் இளைய சகோதரருமான பிரகலாத் தாமோதரதாஸ் மோடி மதுரை மடீசியா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் கூறிய அவர், "சாதாரண குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால்தான் ஏழ்மையான மக்களோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை, கனவுகளை பிரதமர் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்.
ஏழை மக்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவர்களைச் சென்று சேரவில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள் தடைவிதிக்க நினைக்கின்றனர். பிரதமரின் திட்டங்களிலிருந்து மக்களை விலக்கி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
பிரதமரின் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில், மேலும் உறுப்பினர்களை அதிகப்படுத்த உள்ளோம். ஜன் கல்யாண்கரி யோஜனா திட்டத்தை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்போம். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி.
விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். ஒரே நாளில் அடித்தட்டு மக்கள் வரை இந்த திட்டங்களை கொண்டு போக முடியாது" என்றார்.
இதையும் படிங்க: “இட ஒதுக்கீடு குறித்த எஸ்.பி.ஐ விளக்கம் திருப்தி அளிக்கவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி