மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது கமல் ஹாசன் பேசுகையில், “சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால் குழந்தைகளைச் சாலையில் புழுதிக் காட்டில் விளையாடத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரம் உங்கள் கையில் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தும் கட்சியாக மநீம செய்துவருகிறது.
கிராமசபைக் கூட்டம் என்பதை நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை. மக்களின் தேவைகளைக் கூட்டாக முடிவெடுத்து ஒப்பந்தம் செய்து சரி செய்வதே கிராம சபைக் கூட்டம். 586 கோடி ரூபாய் செலவில் மதுரையில் வளர்ச்சிப் பணிக்குச் செலவிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் அதற்கான சுவடே இல்லை.
மநீம கட்சி குழந்தை போன்றது, நல்ல குழந்தையாக கட்சி வளரும். அது நல்ல குழந்தையாக வளரும் என்று மக்கள் நம்பி தேர்தலில் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றிபெற்ற பின் அதனை மீட்டெடுக்கத்தான் முயற்சி செய்வார்கள். அதனைத் தடுக்க வேண்டுமென்றால் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் போட்டியிடுவோருக்கு வாக்களிப்பதை தங்கள் கடமையாக மக்கள் நினைக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுக உள்ளாட்சியில் முதலில் வெல்லட்டும்; நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி பிறகு பேசலாம்!'