மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று ( ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் காளையர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போட்டியில் 1,000 காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மொத்தம் 10 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பிலும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. அதேபோல போட்டியில் அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்பட உள்ளது.
பாதுகாப்பு பணிக்காக 2,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியின்போது சிகிச்சைக்காக 160 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினரும், 60 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தீயணைப்பு படையினரும் தயார்நிலையில் உள்ளனர். இந்த போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கண்கான மக்கள் குவிந்துள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று நடக்கிறது