மதுரை தத்தனேரி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தத்தனேரி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தில் 12 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நாள் ஒன்றுக்கு 50 டன் வீதம் நுண்ணுயிர் உரமாக்கப்படவுள்ளது. வீடுவீடாகச் சென்று குப்பைகளைத் தரம் பிரித்து நுண்ணுயிர் உரமாக்க இலகுரக வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இம்மையத்தை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
''இத்திட்டத்தினால் மதுரை மாநகரம் தூய்மையான நகரமாக, குப்பையில்லா நகரமாக மாற்றப்படும். எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் எப்போதுமே தமிழ்நாடு அரசைக் குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு உயிரிழந்த குழந்தை சுஜித் மீட்புப்பணி விவகாரத்தில் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அரசை குறை கூறிவருகிறார். தமிழ்நாட்டு அமைச்சர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு மனசாட்சியே இல்லாத எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், தற்போது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் அச்சப்படுகிறார். கடந்த 10 நாட்களாக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை'' என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட அரசு நூற்பாலை ஊழியர்கள்!