மதுரை மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள முத்துப்பட்டியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "என் உயிர் மதுரை மேற்கு தொகுதி மக்களுக்குத் தான். இங்கு பல்வேறு தடுப்பணைகள் கட்டி குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.
இந்தப் பகுதியில் அமைந்துள்ள முத்துப்பட்டி கண்மாயில் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இடுகாடு நவீன மயமாக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இடுகாடு சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. தற்சமயம் சுவர்கள் எழுப்பப்பட்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்ல, மதுரையின் வளர்ச்சிக்கு நான் முழுமையாக பாடுபட்டுள்ளேன். மதுரை மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதை சிறு வயதிலிருந்தே நான் முழுமையாக அறிவேன். மதுரை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.
கருணாநிதி காலத்தில் போடப்பட்ட பாதாளச் சாக்கடையின் மூலமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. சரியாக பராமரிக்கவில்லை மிகப் பெரிய தொந்தரவாக மக்களுக்கு இருந்தது. இதனை முதலில் சரி செய்தேன். தற்சமயம் நிரந்தர தீர்வு கண்டுள்ளோம். பத்தாண்டுகள் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
திமுக தலைவர்கள் என்னை கேலியும் கிண்டலும் செய்யலாம். ஆனால் நான் முறைப்படியான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தங்கு தடையின்றி மின்சாரத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். மாதா மாதம் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,500 தேடி வரும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோல கேபிள் இணைப்பிற்கு இனிமேல் பணம் கட்டவேண்டிய தேவை இல்லை. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ’நம்ப முடியல, அண்ணன் ஏன் இப்படி பேசினாரு...’ - ஆ.ராசா பேச்சு குறித்து சீமான்