மதுரை அவனியாபுரம் அருகே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இதற்கு பின் அமைந்துள்ள போக்குவரத்து நகர் சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கழிவில் ஊசிகள், ஊசிகளில் ஏற்றப்படும் மருந்து பாட்டில்கள் ஆகியன சாலையோரம் உள்ள புதர்களில் வீசப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் சிதறிக் கிடக்கும் கண்ணாடி பாட்டில்களால் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
அதுமட்டுமல்லாது தற்போது மழைக்காலம் என்பதால் மருத்துவக் கழிவுகளில் மழைநீர் விழுவதால் அந்த சாலையில் செல்லும் பொழுது துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்த மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்டத்தின் புறநகரில் உள்ள பல சாலைகளிலும், குளங்களிலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.