மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலுக்குள் செல்போன், கேமரா போன்ற கேட்ஜெட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இரவு முழுவதும் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற இளைஞர், நேற்று முன்தினம் (நவ.17) மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, விபூதி விநாயகர் சிலை அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில், வழக்கம் போல் இரவு கோயில் நடை சாத்தப்பட்டு, கோயில் கதவுகள் மூடப்பட்ட நிலையில், வினோத்தை யாரும் கவனிக்காமல் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து வினோத் குமார், இரவு 3 மணி அளவில் எழுந்து பார்த்த பொழுது கோயில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, அவர் வடக்கு கோபுர கதவை தட்டியுள்ளார். கோயில் உள்ளே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்ட உடனே, போலீசார் கதவைத் திறந்து, உள்ளோ இருந்த வினோத் குமாரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில், பிடிபட்ட வினோத், சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்பொழுது அதனை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளிலும் மது போதையில் சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சென்று படுத்து உறங்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வினோத் மது போதையில் இருந்ததாக கூறப்படுகின்ற நிலையில், அவர் கோயிலுக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும், அவர் நடமாட்டம் குறித்தும் கோயிலில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை மீனாட்சியம்மன் கோயில் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனை அடுத்து, வினோத்திடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தமிழக உளவுத்துறை காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு காவல் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மது போதையில் இளைஞர் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: உலக கோப்பை இந்தியா வெல்ல வேண்டுதல்! "அல் தி பெஸ்ட்" முழக்கத்துடன் உடைந்த 1,008 தேங்காய்கள்!