மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தீநுண்மியின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 45 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர், பேறுகாலத்தின்போது இரட்டைக் குழந்தைகளை பெற்ற நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது வரை அக்குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உள்ளனர். மருத்துவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டார். ஜூன் 19ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனை அரசு ராஜாஜி மருத்துவமனை நேற்று(ஜூன் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்த 75 வயது நிரம்பிய முதியவர் ஒருவருடன் சேர்த்து ஒரே நாளில் இருவர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் ஏற்பட்ட இந்த மரணங்கள் மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. நாளுக்குநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வதோடு உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, மீண்டும் ஒரு முழுப்பொது முடக்கத்திற்கு மதுரை தயாராகி வருகிறதோ என்ற கேள்வியையும் பொதுமக்களிடையே எழச்செய்துள்ளது.இதையும் படிங்க: தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?