மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தீ விபத்தால் சேதமடைந்தது. சென்னை ஐஐடி வல்லுநர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டதன் அடிப்படையில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதன் அடிப்படையில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன
இறுதியாக திருப்பதியை சேர்ந்த ஒரு நிறுவனமும் திருப்பூரைச் சேர்ந்த வேல்முருகன் ஸ்தபதி நிறுவனமும் பங்கேற்றதில், தகுதியின் அடிப்படையில் திருப்பூர் வேல்முருகன் ஸ்தபதி நிறுவனத்துக்கு ரூ.10.31 கோடி மதிப்பில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ஏப்ரல் 21-ஆம் தேதி அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் கூறுகையில், வீர வசந்தராயர் மண்டப சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான பண்ணையில் பணிகள் நடைபெறும். பணிகள் வழக்கமாக 36 மாதங்களில் முடிய வேண்டும். ஆனால் அவசரம் கருதி 24 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்தின் பழமை மாறாமல் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
இதற்காக வீர வசந்தராயர் மண்டபத்தில் தூண்கள், உத்தரம், மேற்கூரை போன்றவை எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாதிரியாகக் கொண்டு அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும். மேலும் ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரியை உருவாக்கிக்காட்ட வேண்டும். இதை பரிசீலிக்க மதுரை மண்டல ஸ்தபதி, இந்து அறநிலையத்துறை செயற்பொறியாளர் மற்றும் ஆணையரால் நியமிக்கப்படும் ஒருவர் என மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
சீரமைப்புப் பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஏற்கெனவே கற்கள் கொண்டு வரப்பட்டு செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து கற்களை கொண்டு வருவதற்காக கனிம வளத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பெயரிலேயே உரிமம் பெறப்பட்டுள்ளது. கனிம வளத்துறை அனுமதி கிடைத்தவுடன் கற்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றனர்.
இதையும் படிங்க:53 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி கோயில் பூஜை செய்த மதுரை ஆதீனம்!