மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக இணைய வழியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கோட்ட மேலாளர் லெனின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரை ரயில்வே மருத்துவமனை கரோனா சிகிச்சையில் சிறப்பான சேவை புரிந்து வருகிறது. இதுவரை 220 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
சரக்கு போக்குவரத்தின் மூலம், மதுரை கோட்டம் இந்த நிதி ஆண்டில் ரூ. 71.56 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தை விட 23 விழுக்காடு அதிகமாகும். மதுரை கோட்டம் இந்த நிதி ஆண்டில் 5.76 லட்சம் டன்கள் சரக்குகளை கையாண்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 66.5 விழுக்காடு அதிகமாகும். மேலும், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மதுரை கோட்டத்திலிருந்து மொத்தம் 35 ரயில்கள் இயக்கப்பட்டு 35 ஆயிரத்து 618 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மதுரை-போடி அகல ரயில் பாதைப் பணியில் 90 கிலோ மீட்டரில் தற்போது 37 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
வருகின்ற 2021ஆம் ஆண்டு செப்டம்பர் இத்திட்டத்தின் பணிகள் நிறைவடையும். ரூ. 450 கோடி மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மதுரை-தூத்துக்குடி-திருநெல்வேலி 188 கி.மீ. தூர இரட்டை பாதை பணிகளைப் பொறுத்தவரை தற்போது வரை 44 கி.மீ. நிறைவடைந்துள்ளன.
பாம்பனில் 2, 078 மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி வருகின்ற 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெறும். இதில், இரட்டை பாதை மட்டுமன்றி, மின்மயமாக்கலுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ராமேஸ்வரம்-தனுஷ்கோடி வரையில் புதிய ரயில் பாதைக்கு ரூ. 208.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக 135 கி.மீக்கு புதிய ரயில் பாதை ரூ. 120 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஈ டிவி பாரத் நேர்காணல்: பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வானவர்