மதுரை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள அதே நாளில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் சார்பாகவும் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வு தேதியை மாற்றக்கோரி, பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் இந்திய வானியல் துறைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “மத்திய தேர்வாணையம் அக்டோபர் 31-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள் (Combined Graduate level Examinations), அறிவியல் உதவியாளர் பதவிக்கு (Scientific Assistant in IMD Examinations) டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். கடந்த காலங்களில் மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன.
2011-ல் அறிவியல் உதவியாளர் தேரேவுகளில் (Scientific Assistant in IMD Examinations) வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017-இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள் தரப்படுகின்றன. 2022-இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்” என எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்