கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக சமயம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழாவும் வரலாற்றிலேயே முதல்முறையாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்பிரதாயத்தின் பொருட்டு, பக்தர்களின் ஆத்ம திருப்தியின் அடிப்படையிலும் திருக்கல்யாண நிகழ்வு மட்டும் மீனாட்சி கோயிலின் உள்ளே உள்ள சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் சிவாச்சாரியார்கள் நான்கு பேர் மட்டுமே பங்கேற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வுகள் காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. சரியாக காலை 9.09 மணியளவில் திருக்கல்யாண சடங்குகள் தொடங்கியதையடுத்து சிவாச்சாரியார்கள் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சார்பில் மீனாட்சியம்மனுக்கு திரு மாங்கல்யம் அணிவித்தனர்.
வைபோக நிகழ்வுகள் அனைத்தும் 9.29 மணிக்கு நிறைவு பெற்றதையடுத்து, நேரலையாக வீட்டிலிருந்தே வைபவத்தைக் கண்டு ரசித்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கிய நிகழ்வுடன் திருக்கல்யாணம் நிறைவு பெற்றது.
இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்