மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி திருக்கோயிலில் தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தினசரி மாலையில் அம்மன் சிம்மவாகனம், அன்ன வாகனம், கமாதேனு வாகனம், யானை வாகனம், கிளி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழந்தருளிய நிலையில் 9ஆம் நாளான நேற்று இரவு மீனாட்சி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் ஆடி வீதியில் எழுந்தருளினார்.
மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் எழுந்தருளிய நிலையில் பல்வேறு ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் விழாக்கள் மற்றும் வீதி உலா நிகழ்வுகள் கோயில் உட்பிகாரத்திலயே நடைபெற்றுவருவதால் விழாக்களின்போது பக்தர்கள் காண அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேதமடைந்த பவானீஸ்வரர் கோயில் - விரைவில் சீரமைக்கக் கோரிக்கை