மதுரை: மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன.
இந்த நிலையில் மலைக்குப்போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கோயிலுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்டவற்றை செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஜூன் 28) நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது, அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என கருத்து தெரிவித்தனர். மேலும், திருப்பரங்குன்றம் மலையின் மேல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்கா: மதுரையில் திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. இது இஸ்லாமிய துறவியான ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை என்று கூறப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலையின் கீழ் பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலும், அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேல் பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் 40 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தர்காவிற்கு நன்கொடையாக வழங்கியதாக கூறப்படுகிறது. தர்காவிற்கு அருகிலுள்ள இடம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என கோயில் தரப்பினர் கூறி வந்தனர். ஆனால், அந்தப் பகுதி தர்காவிற்கு சொந்தம் என கடந்த 1975ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தற்போது இந்த தர்காவில் ஆண்டுதோறும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஆண்டுதோறும் ரஜப் பிறை மாதத்தில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். அங்கு தர்கா இருந்தபோதும், திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் வழிபட இந்துத்துவா அமைப்பினர் நீண்ட காலமாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Bakrid: நாகர்கோவிலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!