மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கு கடந்த பல ஆண்டுகளாகக் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இந்தத் தேர்வைக் கண்காணிக்க மண்டல அளவில் டிஎன்பிஎஸ்சி அலுவலகமும் இல்லை. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள் ஆகியோரையே முழுமையாக டிஎன்பிஎஸ்சி நம்பியுள்ளது.
இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய புள்ளி விவரங்களுடன் முறைகேட்டில் ஈடுபட்டது யார்? எந்தத் தேர்வில் முறைகேடு? என்று தகுந்த விவரங்களுடன் குறிப்பிட்டு, பிரதான கோரிக்கையுடன் போதிய தகவல்களுடன் புதிதாகப் பொதுநலமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் தற்போது தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ‘படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?’ - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி