மதுரை: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது கருமுட்டைகள் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியாக மாரிமுத்து என்பவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் இதே போல தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கருமுட்டையை எடுக்க முயன்றதாக, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புரோக்கர் மாரிமுத்து முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, அவருக்கு முன் ஜாமீன் அளிக்கக் கூடாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி இளங்கோவன், இந்த முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு வாதம்!