சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துபாண்டி மற்றும் பழனிசாமி ஆகியோர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "சிவகங்கை மாவட்டம், சிரூர் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
அதில் தனது 4.87 ஹெக்டேர் நிலத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், 1.87 ஹெக்டேர் நிலத்திற்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலத்திற்கு முழுமையாக நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் முத்துப்பாண்டி கோரியிருந்தார். இதேபோல் தனது 10 ஏக்கர் நிலத்திற்கு நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என பழனிச்சாமி என்ற விவசாயி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் மனுவை பரிசீலனை செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு 3 மாதத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க : இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, இன பிரச்னையுடன் பின்னிப் பிணைந்துள்ளது - சிவஞானம் சிறீதரன், எம்.பி.