மதுரை: மதுரையைச் சேர்ந்த டைட்டஸ் மதன் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை மாநகராட்சிப் பகுதியான விளாங்குடியில் சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (டிச.8) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5 வருடங்கள் ஆகியும், மதுரை மாநகராட்சித் தரப்பில் தற்போது வரை பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி, சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மதுரை மாநகராட்சியே துணை போகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அதற்கு உடந்தையாகவும் இருந்துள்ளது. இது போன்ற பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மதுரை மாநகராட்சி பதில் மனுத் தாக்கல் செய்ய மறுக்கிறது. இது தவறான போக்காகும்.
இது போன்ற வழக்கில் 8 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால், அதனை மதுரை மாநகராட்சி பின்பற்றவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
சட்ட விரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் பதில் மனுத்தாக்கல் செய்யாதது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் நியமனம்! - ஆளுநர் மாளிகை அறிவிப்பு!