திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "நெல்லை டவுன், பேட்டை, நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகள் முக்கியமான பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்க இப்பகுதிகளில் பல இடங்களில் தோண்டினர்.
அதேபோல எட்டு மாதங்களுக்கு முன்பாக மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக சாலையில் பல இடங்களில் பள்ளங்களைத் தோண்டினர். இந்தப் பணிகள் முடிந்த பின்பும் மேடு பள்ளங்கள் ஆகவே சாலைகள் உள்ளன. புதிய சாலைகள் போடப்படாமல் உள்ளன.
இந்தப் பகுதியில் கல்லூரி வட்டாரக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் போன்ற பல அலுவலகங்கள் உள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.
இங்கு மேடு பள்ளமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்குள்ள சாலை மேடு பள்ளங்களை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வுசெய்து மூன்று மாதங்களில் சாலைப் பணிகள் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க... கல்லணைக் கால்வாய்கரை சாலை வழக்கு - விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!