மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த பூக்கள் விற்பனை சந்தை கரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டது. தற்போது, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துவரும் நிலையில், மதுரை மலர் வணிக சந்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மலர் வணிக வளாகத்தைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தனர்.
அதன்படி, மலர் வணிக வளாகம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, மக்கள் அதிகம் கூடாத வகையில், மூங்கில் கம்புகள், கம்பிகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (ஆக. 24) மலர் வணிக வளாகம் திறக்கப்பட்டது. மலர் விற்பனை காலை 5 மணி முதல் நண்பகல் 2 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலர் வணிக வளாகத்திற்கு வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடலின் வெப்ப அளவு சோதனை செய்யப்படுகிறது.
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல் வணிக வளாகத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கப்படுகிறது. மலர் வணிக வளாகம் திறக்கப்பட்டது குறித்து பேசிய அன்னை மீனாட்சி பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன், " மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி வருகிறோம். பொதுமக்களிடமும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்துகிறோம்.
இங்கு செயல்பட்டுவரும் ஐந்து விற்பனை சங்கங்கள் இணைந்து மூங்கில் தடுப்புகள் கம்பித் தடுப்புகள் என அனைத்தையும் ரூ.5 லட்சம் செலவில் செய்திருக்கிறோம். தற்போது விழாக்காலம் இல்லாததால் மலர் விற்பனை குறைந்துள்ளது. உற்பத்தியும் குறைக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் வருகையும் குறைவாக உள்ளது" என்றார்.
நிலக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மலர்கள் நாளொன்றுக்கு 5 முதல் 10 டன் வரையில் இங்கு விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பறவைகளின் எச்சங்கள் விழுவதை தடுக்க ஏற்பாடு - திருமலை நாயக்கர் மகாலில் வலை அமைக்கும் பணி தீவிரம்!