மதுரை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது.
இந்நிலையில் போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறை மணிஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. பின்னர் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசிடம் புகார் மனு கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மணிஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை விசாரணை செய்வதற்காக கடந்த 30ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை மீண்டும் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மணிஷ் காஷ்யப் மதுரை மத்தியச் சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இதனிடையே மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவித்துள்ளார்.