மதுரை: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) சங்கம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில், வருகின்ற 22ஆம் தேதி விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரி ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில், “இந்திய சுதந்திரம் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜயதசமி (22-10-23) நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட் பிளாக் ஷூ ஆகியவை அணிந்து, இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து, நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வலமாக சுற்றி வந்து, இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல், கடந்த வருடம் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தோம். காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல் துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்று, தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தினோம். எனவே இந்த வருடம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது, மற்ற மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய காரணம் என்ன?