மதுரை: கடந்த ஜூன் 17ஆம் தேதி, பாஜக மாநிலச் செயலாளர் S.G.சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மைப் பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒரு விதமான பதற்றம் நிலவுவதாக கருத்ததை பதிவு செய்து இருந்தார்.
மேலும், இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் கணேசன், மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார்.
அதனை அடுத்து, மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறை வழக்குப் பதிவு செய்து, S.G.சூர்யாவை கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள S.G.சூர்யா, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் புகார்தாரரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கணேசன் மற்றும் காவல் துறை பதிலளிக்க வேண்டும் எனவும், மேலும் வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.