மதுரை: கோ.புதூர் சர்வேயர் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் மேஜர்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மதுரை சொக்கிகுளத்தில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் கடந்த 2012 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் 2 தரைத்தளங்கள், 4 மாடிகளுடன் 2.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு 5 திரையரங்கங்கள், அனைத்து விதமான கடைகளும் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். வணிக வளாகம் அருகே பெட்ரோல் நிலையம், எதிரில் பள்ளி அமைந்துள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கும், அவசர காலத்தில் பொதுமக்கள் வெளியேறவும் வழிகள் இல்லை.
இதனால் மதுரையில் ஆட்சியராக இருந்த சகாயம், வணிக வளாகம் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அப்போது திரையரங்கங்கள் செயல்படவில்லை. சகாயம் மாறுதலான பிறகு, வணிக வளாகத்தில் திரையரங்கங்கள், கடைகள் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் கடந்த டிச.24 அன்று இரவு சுமார் 9.45 மணி அளவில் 3 மற்றும் 4வது தளங்களில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் அவசரம், அவசரமாக அவர்களாகவே வெளியேறினர். இதை செல்போன்களில் படம் பிடித்தவர்களை, வணிக வளாக ஊழியர்கள் கடுமையாகத் தாக்கினர்.
தீ விபத்து நடைபெற்றபோது, அதுபற்றி தெரியாமல் வளாகத்தில் உள்ள திரையரங்குகளில் மக்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். தீ பரவியிருந்தால் திரையரங்கில் இருந்தவர்கள் கடுமையாக பாதிக்குப்புக்குளாகி இருப்பர். அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு தீ பரவியிருந்தால், நினைத்துப் பார்த்திருக்க முடியாத அளவுக்கு உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.
இந்த தீ விபத்துக்கு அரசின் அவசர கால பாதுகாப்பு விதிமுறைகளை வணிக வளாகத்தினர் கடைபிடிக்காததே காரணமாகும். இந்நிலையில், தீ விபத்தை மறைத்து ஜன.1-இல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும், புத்தாண்டு விற்பனையை மேம்படுத்தவும், நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தால் கட்டடத்தின் உறுதித்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டடம் எந்நேரமும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.
எனவே, வணிக வளாகத்தில் தீ தடுப்பு அமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தவும், அங்கு தீ தடுப்பு வாகனங்கள் இருப்பதை உறுதி செய்யவும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், வாகனங்கள் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு வணிக வளாகம் செயல்பட அனுமதிக்கவும், அதுவரை வணிக வளாகம் செயல்படுவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வளாகத்தில் மறு உத்தரவு வரும் வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர் தகுதியான நபர்களைக் கொண்டு வணிக வளாகத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் மறைவு; கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான நட்சத்திரங்களின் உருக்கமான பதிவு!