மதுரை: திருச்சியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க சமூக பாதுகாப்புக்குழு ஏற்படுத்த உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, அபினிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், முக்கிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், இப்பகுதிகளில் தொடர்ச்சியாக நகை திருட்டு, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாகவும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அடுத்தடுத்தும் நடைபெற்று வருகிறது.
இது போன்ற குற்றச் சம்பவங்களை பார்க்கும்போது இரண்டு கிராமங்களை குறிவைத்து மர்ம நபர்கள் செயல்படுவதுபோல் தெரிய வருகிறது. இங்கு காவல்நிலையம் மற்றும் காவலர்கள் ரோந்து செல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
எனவே, தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் புத்தனாம்பட்டி கிராமத்தில் துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக பாதுகாப்புக்குழு ஏற்படுத்த வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புத்தனாம்பட்டி கிராமத்தில் துணை காவல் நிலையம், குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக பாதுகாப்புக் குழு அமைப்பது தொடர்பான மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.