மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்திலிருந்து திருடப்பட்ட 12,500 இலவச வேஷ்டி, சேலைகள் தொடர்புடைய வழக்கில், நில அளவை கள உதவியாளர் முன்ஜாமீன் கோரி தொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில், தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12,500 இலவச வேஷ்டி, சேலைகள் நவம்பர் 7ஆம் தேதி அன்று திருடப்பட்டன.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், நில அளவை கள உதவியாளராகப் பணியாற்றி வரும் மதுரையைச் சோ்ந்த சரவணன் வேஷ்டிகள் திருடியவருக்கு உதவியது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த நில அளவை கள உதவியாளர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “வேஷ்டி, சேலை திருட்டு சம்பவத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். நான் நில அளவை கள உதவியாளராகப் பணிபுரிகிறேன். எனக்கும் வேஷ்டி, சேலைகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (நவ.17) நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, “இலவச வேஷ்டி, சேலைகள் எங்கே உள்ளது என்ற தகவலையும், திருடுவதற்கு சாவி மற்றும் அலுவலகக் கதவை மனுதாரர் திறந்து விட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு; உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!