மதுரை: மதுரையைச் சேர்ந்த சட்ட பாதுகாப்பு இயக்கம் வழக்கறிஞர் முனியசாமி, “சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரத்திற்கு எந்த தொழில் நிறுவனங்களும் இல்லை. இது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்து, தொழிற்சாலைகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளார்.
அதில், "தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் இல்லாததால், படித்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மேலும், அவர்கள் சென்னை, பெங்களூர் போன்ற வெளிநகரங்களுக்குச் செல்வதாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட முதலீட்டின் நிறுவனங்களும் தொழிற்சாலைகள் தொடங்கவில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். தொழிற்சாலைகள் தொடங்குவது குறித்து நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என முறையீடு செய்திருந்தார்.
இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற விவகாரங்களை நீதிமன்றம் எவ்வாறு தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடியும் எனக் கூறி, வழக்கறிஞர் தரப்பில் பொது நல மனுவாக தாக்கல் செய்தால், நீதிமன்றம் தரப்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு தள்ளுபடி!