மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பழனிசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்களது நிறுவனம் மதுரையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களாக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன. எங்களது நிறுவனம் மொத்தமாக நிலங்களை விலைக்கு வாங்கி, நகரமைப்பு இயக்குனர் அலுவலக அனுமதி பெற்று குறைந்தபட்சம் ஆயிரம் மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு தனி மனைகளாக விற்பனை செய்கிறது.
இந்த நிலையில், எங்களது நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எங்களது வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டு, டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்துக்குச் சொந்தமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நிலங்கள் உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரிசெய்ய விரும்புவதால், இதற்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நியோமாக்ஸ் தரப்பு வழக்கறிஞர் வீர ராகவன் ஆஜராகி, “நிறுவனம் நடைபெற்ற பிரச்னைக்கு தீர்வு காணவே ஓய்வு பெற்ற நீதிபதி அமைக்க கோருகிறோம். நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதன் சொத்தை பிரித்துக் கொடுக்கத் தயாராக உள்ளோம்” என வாதிட்டார்.
ஏற்கனவே அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதில், “32 ஆயிரத்து 48 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாகத்தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.
மேலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி கமிட்டி அமைத்தால், அது மறைமுகமாக புலன் விசாரணையை பாதிக்கும். கடந்த பல ஆண்டுகளாக இது போல் நிதி நிறுவன மோசடி குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் விசாரணை நிலுவையில் உள்ளது. சில குழுக்களில் விசாரணை நீதிபதிகள், விசாரணையில் இருந்து விலகிவிட்டனர்.
நியோமேக்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் 32 ஆயிரத்து 48 முதலீட்டாளர்கள் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இதனை அடிப்படையாகக் கொண்டு சராசரியாக கணக்கிட்டால் 32 ஆயிரத்து 48 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது.
ஆனால் அவர்கள் டிடிசிபி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. மேலும், இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தின் அடிப்படையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அவர்கள் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்சம் சதுர அடியை, சராசரியாக பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 697 சதுர அடிதான் கொடுக்க முடியும்.
எனவே இது சாத்தியமற்றது” என தெரிவித்தார். அந்த வாதத்தை நீதிபதி ஏற்று, முதலீட்டாளர்களுக்கு தற்போதுள்ள இடத்தை பங்கிட்டு தருவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.